தமிழகத்தில் சிறுபான்மை அற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச சேர்க்கை பெற வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி ஒன்றாம் வகுப்பு உள்ளிட்ட நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 25 விழுக்காடு இடங்களை கணக்கிட்டு அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். அந்த இடங்களில் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிடப்படும். அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களில் எண்ணிக்கை இணையதளத்திலும் வெளியிடப்படும். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் www. rte. tnschools. gov. in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பரிசீலனை மே 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்கப்படும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை பள்ளியின் 25 விழுக்காடு இடங்களை விட கூடுதலாக இருந்தால் குழுக்கள் முறையில் மே 26 ஆம் தேதி சேர்க்கை மேற்கொள்ளப்படும். தேர்வானோர் மற்றும் காத்திருப்போர் விவரம் மே 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

Post a Comment