FIFA உலக கோப்பை: 10,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் கத்தார் ஏர்வேஸ்..!

 


கத்தாரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டியைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள் என்பதால் அதிகளவு பயணிகளின் வருகையைக் கையாள்வதற்காகவும் தொற்றுநோய்க்குப் பிந்தைய விமான நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் ஏற்ப கத்தார் ஏர்வேஸ் தனது ஊழியர்களை 10,000 உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கத்தார் தலைநகரமான தோஹாவை மையமாக கொண்டு இயங்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை தற்போது 45,000 இலிருந்து 55,000 க்கும் அதிகமாக உயர்த்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் ஒரு அறிக்கையில் “கொரோனாவிற்குப் பிறகு கத்தார் ஏர்வேஸ் வளர்ச்சிப் பாதையில் உள்ளது மற்றும் உலகக் கோப்பைக்கான செயல்பாடுகள் முழு வீச்சில் இருப்பதால், விமான நிறுவனம் வேலைக்கு ஆட்சேர்ப்புகளை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய பணியிடங்களில் வேலை நிரந்தரமாக இருக்குமா என்பது குறித்த தகவலையும் விமான நிறுவனம் கூற மறுத்துவிட்டது.

மேலும் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் ஆட்சேர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது இந்நிறுவனம் தனது விமான சேவையினை 33 நகரங்களாக குறைத்த பின்னர், 2021 ஆம் ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை 37,000 க்குக் கீழே குறைத்தது. அதன் பின்னர் இது 150 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் விமான செயல்பாடுகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல்-பேக்கர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், “அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கையாள இந்த மிக விரைவான சேவையை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த உலக கோப்பை போட்டியின் போது, ​​கத்தார் ஏர்வேஸ் தனது விமான பயண நேர அட்டவணையில் 70 சதவீதத்தை சரிசெய்து, தோஹாவிற்கு கூடுதல் விமானங்கள் வருவதற்கு வழிவகை செய்து வருகிறது. அதே போல் மற்ற விமான நிறுவனங்கள் கத்தாருக்கான விமானங்களை கணிசமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கத்தார் இந்த நிகழ்வுக்காக தனது பழைய விமான நிலையத்தை மீண்டும் திறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post