ஜெருசலம் குறித்த ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு – இந்தியாவின் ஆதரவிற்கு பாராட்டு
மல்லி நியூஸ் :டிச.24
ஜெருசலத்தை இஸ்ரேலுடைய தலைநகரமாக அறிவிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான ஐ.நா சபையின் தீர்மானத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வரவேற்றுள்ளார். 128 ஓட்டுக்கள் ஆதரவாகவும், 9 ஓட்டுக்கள் மட்டும் எதிராகவும் பதிவாகி இந்த தீர்மானாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அரங்கேறிவரும் அமெரிக்க-இஸ்ரேலிய காலனித்துவ திட்டத்திற்கு இந்த தீர்மானம் பெரும் அடியாகும். ஃபாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுக்கு எதிரான வலுவான கருத்தொற்றுமை உருவாகியுள்ளதையே இது சுட்டிகாட்டுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், அமெரிக்கா மற்ற நாடுகளிடமிருந்து எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதரவையும் பெறவில்லை. ஃபாலஸ்தீனில் நடக்கும் ஏகாதிபத்திய அராஜகங்களை சகித்து கொள்ள இனியும் உலக நாடுகள் தயாராக இல்லை என்ற தகவலையே ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவான வாக்குகள் தெரிவிக்கின்றன. இது அரபு நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும்; அப்பாவி மக்களை படுகொலை செய்வதையும், இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் நிறுத்திக் கொள்வதற்கான நேரமாகும்.
ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E. அபுபக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் விருப்பத்திற்கு எதிராக வாக்களித்ததின் மூலம், ஃபாலஸ்தீனின் சுதந்திரத்திற்கு ஆதரவாக இந்தியா அதன் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், நமது கொள்கைகள் எந்த வல்லரசுகளின் செல்வாக்கின் கீழ் இல்லை என்ற செய்தியை தெரிவித்துள்ளது. இந்தியாவின் உயரிய மற்றும் சுதந்திரமான இந்த நிலைப்பாடு நமது அனைத்து எதிர்கால வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Post a Comment