கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழகத்தில் உள்ள கோயில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியன்று இரவு பத்து மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் அடியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் இருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்திய சென்னை சிறப்பு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மக்கள் பாதுகாப்பு கருதி மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகத்திலும் கடை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் கடைகளை அகற்ற அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து வியாபாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துவிட்டது. எனவே கோயில் கடைகளை அகற்ற பிறப்பித்த தமிழக அரசின் அரசாரணையை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜன., 30ம் தேதி தமிழக அரசின் அரசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

Post a Comment

Previous Post Next Post