தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில், எல்.சி.117 ரயில்வே அருகே, கீழ்மட்டப் பாலம், சுமார் 300 மீட்டர் அளவுக்கு அமைக்கும் பணி கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.
ஆத்தாளூர், நாடாகாடு, முனிக்கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதேபோல் கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனை மற்றும் இன்ன பிற தேவைகளுக்காக பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் பேருந்துக்கு செல்லவும், பேராவூரணி பேருந்து நிலையம் செல்லவும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரவேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. கோயிலுக்கு மாவடுகுறிச்சி, தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது பாலம் கட்டுமான வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆத்தாளூர் கிராமத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்காதவகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆத்தாளூர் பொதுமக்கள் சார்பில், சமூக ஆர்வலர் க.ராஜரெத்தினம் ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
படம் : கீழ்பாலம் பணிகள் நடைபெற்று வரும் ஆத்தாளூர் ரயில்வே கேட்

Post a Comment