அதிராம்பட்டினத்தில் மின்சார வசதியின்றி கற்காலத்தில் மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் சிறுவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அவலம் அரங்கேறி வருகிறது.
மின்சார வசதி இல்லை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் தோப்புத்தெரு உள்ளது.
இங்கு கடந்த 2001-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.
ஆனால் 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்து வருகிறார்கள். அரசு வழங்கிய பட்டா இருந்தும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. இதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கற்காலத்தை போல எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தினசரி பரிதவித்து வருகிறார்கள்.
படிப்பை கைவிடும் சிறுவர்கள்
மேலும் அங்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதியும் இல்லை. மின்சார வசதியின்றி இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அதிராம்பட்டினத்தில் நாங்கள் 20 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறோம்.
இதுவரை எங்கள் தெருவுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை. சாலை, குடிநீர் வசதியும் இல்லை. எங்களிடம் அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ளது. இந்த பட்டாவை கொண்டு வீட்டு வரி ரசீது கேட்டு பல ஆண்டுகளாக அலைகிறோம்.
விரைந்து நடவடிக்கை
அதிராம்பட்டினம் பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே, வீட்டு வரி ரசீது கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு மின்சார வசதியும் கிடைக்கவில்லை. தண்ணீர் வசதியும் கிடைக்கவில்லை.
கற்காலத்தில் மனிதன் காட்டில் வாழ்ந்ததை போல எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மின்சார வசதியின்றி சிறுவயதிலேயே படிப்பை பலர் பாதியில் கைவிட்டு விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். நவீன யுகத்திலும் மின்சார வசதியின்றி அவதிப்படும் தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த பகுதியை சேர்ந்த அனைவரிடமும் உள்ளது.
Post a Comment