வெயிலின் தாக்கத்தால் மாணவன் மரணம் விழிப்புணர்வு பதிவு.!

 


இதய பாதிப்பால் இறந்த தனது நண்பனின் உடலைக் காணச் சென்ற போது அதிக நேரம் வெயிலில் நின்றதால் வெப்ப வாதத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார். 


இவருக்கு பிறவியிலேயே 

வியர்வை சுரப்பிகள் இல்லாத நிலையில் வியர்வை சுரக்காமை நோய் இருந்துள்ளது. 


மருத்துவ மொழியில் 

இந்த நோய்க்குப் பெயர்


ஆன்ஹைட்ராட்டிக்/ ஹைப்போ ஹைட்ராட்டிக் எக்டோ டெர்மல் டிஸ்ப்லேசியா (ANHYDROTIC / HYPOHYDROTIC ECTODERMAL DYSPLASIA) 


நமது உடல் 

தாயிடம் இருந்து பெறப்படும் 

கரு முட்டையுடன்

தந்தையின் உயிரணு சேர்ந்து 

ஒரு செல்லாக ஆரம்பித்து 

பிறகு உடலாக உருவெடுக்கிறது. 


ஜெர்ம் லேயர் எனும் நிலையில் 

மூன்று உறைகள் இருக்கும். 


எக்டோடெர்ம் (ECTODERM) 

மீசோடெர்ம்(MESODERM) 

எண்டோடெர்ம் ( ENDODERM) 


அந்த ஒரு செல் - பல செல்களாகி திசுக்களாகி உருவாகும் போது

இந்த ஒவ்வொரு உறைகளில் இருந்தும் பல உறுப்புகள், பாகங்கள் தோன்றும். 


இந்த வகையில் 

எக்டோடெர்மில் இருந்து 

- தோலின் வெளிப்புறச் சுவர்

- அதில் இருக்கும் ரோமங்கள், வியர்வை சுரப்பிகள்

- வாய் மற்றும் ஆசனவாயின் வெளிப்புற சுவர்

- கருவிழி ( கார்னியா) 

- கண்களுக்குள் இருக்கும் லென்ஸ் 

- நரம்பு மண்டலம் 

- தோலின் தொடு உணர்வளிக்கும் உறுப்புகள் 

- பல்லின் எனாமல்

- அட்ரினல் சுரப்பியின் உள்பகுதி

- பிட்யூட்டரி & பீனியல் சுரப்பியின் வெளிப்புற பகுதி 

உருவாகும். 


மீசோடெர்மில் இருந்து 

- எலும்புகள்

- இரைப்பை / குடல் 

- சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றும் மண்டலம் 

- இனப்பெருக்க உறுப்புகள் 

- தோலின் அடிப்பகுதி 

- அட்ரினல் சுரப்பியின் வெளிப்புறம் 


எண்டோடெர்மில் இருந்து 

- குடலின் சுவர் 

- சுவாசப்பாதையின் சுவர் 

- இனப்பெருக்க மற்றும் சிறுநீர்ப்பாதை சுவர் 

- கல்லீரல் 

- கணையம் 

- தைராய்டு / பாராதைராய்டு சுரப்பிகள் உண்டாகும். 


இவ்வாறு இந்த உறைகளில் இருந்து உறுப்புகள் உருவாகுவதற்கு மரபணுக்களின் பங்கு முக்கியமானது. 


இந்த மரபணுக்களின் வெளிப்பாட்டில் கோளாறு ஏற்படும் போது அவை சார்ந்த நோய்கள் உருவாகின்றன. 


இறந்த இந்தத் தம்பிக்கு எக்டோடெர்ம் லேயர் உருவாகத் தேவையான மரபணுக்களில் பிரச்சனை இருந்தமையால்


- முடிகள் இருக்காது

- வேர்வை சுரப்பிகள் இருக்காது 

- பற்கள் முறையாக வளர்ந்திருக்காது


இத்தகைய நிலையில் 

சாதாரணமாக வெயிலில் நின்றாலும் 


உடலின் மையப்பகுதி சூடாகும் போது அதை குளிர்விக்க வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கும் 


ஆனால் இத்தகைய எக்டோடெர்மல் டிஸ்ப்லேசியா நோயாளிகளுக்கு வியர்வை சுரக்காது என்பதால் 


உடலின் மையப்பகுதி வெப்பமானது சிறிது நேரம் வெயிலில் நின்றாலும் அபாயகரமான அளவுக்கு உயர்ந்து விடும். 


இதனால் மூளை செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுவிடும் 


உடனடியாக அட்மிட் செய்து 

உடலை முழுவதுமாக குளிர்விக்கும் சிகிச்சையை ஆரம்பிக்காவிடில் மூளை முற்றிலுமாக செயலிழந்து மரணம் ஏற்படும். 


இத்தகைய நோயாளிகள் 

கண்டிப்பாக 

தீவிரமான வெயிலில் நீண்ட நேரம் நின்று பணி புரியக் கூடாது.


குளிர்ச்சியான நீரை அருந்திட வேண்டும். 


வெயிலில் நிற்க வேண்டிய சூழல் வந்தால் ஆடைகளில் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலை குளிர்ச்சி ஆக்கலாம். 


- தலைசுற்றல் 

- குமட்டல் 

- தலைவலி 

- உடல் உஷ்ணம்

- வாந்தி ஆகிய அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவமனையை நாட வேண்டும். 

காலம் தாமதித்தால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

கோடை வெயிலின் தாக்கம் ஜூன் மாதத்தின் முற்பகுதியிலும்   அதிகமாக இருக்கும் என்ற நிலையில் பள்ளி சிறார் சிறுமியருக்கு கோடை கால விடுமுறைகளை  நீட்டித்தாலும் அது நன்மையே ஆகும். 

பள்ளி செல்ல உள்ள குழந்தைகள் 

 தினமும் ஒன்று முதல் இரண்டு  லிட்டர் தண்ணீராவது கட்டாயம் பருக வேண்டும். 

மோர் , இளநீர் ,பதநீர் , லெஸ்ஸி, எலுமிச்சைச் சாறு போன்றவற்றைப் பருகலாம். 

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் 12 மணி முதல்  3 மணி வரை வெளியே சுற்றக் கூடாது. விளையாடக் கூடாது. 

கவனமும்

விழிப்புணர்வும்

பல உயிர்களைக் காக்கும்


நன்றி 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை

Post a Comment

Previous Post Next Post