தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ராவுத்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (34) வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் உடலை பிரேத பரிசோதனை நடத்திய பிறகே தரப்படும் என தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது.
அப்படியே தரவேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்றிலிருந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டும் உடல் தரப்படவில்லை எனக் கூறி ராவுத்தன் வயல் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 12 மணி முதல் 2.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை எடுத்து டிஎஸ்பி பாஸ்கர் பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இறந்தவருக்கு மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment