தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது, தற்கொலைகளை தடுக்கும் வகையில், லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில், 'நம்பர் லாட்டரி' விற்பனை அமோகமாக நடக்கிறது.
இம்முறையில், கேரளா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநில லாட்டரிகளின், 'ஆன்லைன்' குலுக்கல் நேரத்திற்கு ஏற்ப, இக்கும்பல் துண்டு சீட்டில் நம்பர் எழுதி வழங்குகிறது. ஒரு லட்சம் பரிசுக்கு, ரூ. 50, கூடுதல் பரிசுக்கு ஏற்ப, 120, 360, ஆயிரம் ரூபாய் என்றும், அதற்கு ஆங்கில எழுத்து வரிசையுடன் எண்களை எழுதி, விற்பனை செய்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில், அந்த பெயருடைய லாட்டரி குலுக்கல் முடிந்து, 'ஆன்லைன்' வாயிலாக வெளியிடப்படும் முடிவு அடிப்படையில் பரிசு வழங்கப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் பரிசு விழும்; வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில், தொழிலாளர்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பலர், லாட்டரி வாங்குகின்றனர். இதனால், பல குடும்பங்கள் வாழ வழியின்றி, லாட்டரி மோசடியால் பாதித்து வருவதோடு, ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
அரசு தடை செய்தாலும், உள்ளூரில் களைகட்டியுள்ள கேரளா லாட்டரி விற்பனை செய்யும் கும்பல் துணிகரமாக, பொது இடங்களில் வைத்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வரும் லாட்டரி விற்பனையை தடை செய்ய காவல்துறை முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment