மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. தாஜுதீன் தலைமை வகித்தார். மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் போஸ், சேசுராஜா, சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடியும் நிலையில் விசைப்படகுகள் மீனவர் நலத் துறை அனுமதி பெற்று ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது எனவும், விசைப்படகுகளில் டிவைசர் கருவி பொருத்துவதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் அக்கருவியைப் பொருத்த அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது, தடைக்காலத்தில் 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் நிலையில்
இயந்திரம் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன் இனப்பெருக்க காலம் என்ற அரசின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இறால், நண்டு, மீன் உள்ளிட்டவற்றைப் பிடித்து வருவதால் தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்ஜலசந்தி விசைப்படகு மீனவர்கள் கூட்டமைப்பின் கௌரவத் தலைவராக போஸ், தலைவராக தாஜுதீன், செயலராக சேசுராஜா, பொருளாளராக செல்வக்கிளியை போட்டியின்றித் தேர்வு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Post a Comment