திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கிடாவுடன் மலை மீது உள்ள தர்காவிற்கு செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசாருக்கும் மக்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள குன்றின் மீது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலும் அமைந்துள்ளன. மேலும், மலையில் மேலே ஏறி செல்லும் வழியில் சிக்கந்தர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது இந்து - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
திருப்பரங்குன்றம் ரத வீதியில் உள்ள பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மலை மீது இருக்கும் சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, சேவல் பலியிட்டு சமபந்தி விருந்து நடைபெற இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் மலையின் மீது வழிபாடு செய்யும் அனுமதி மட்டுமே இருப்பதாகவும், மற்றவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சந்தனக்கூடு விழாவிற்கு வந்த இஸ்லாமியர்கள் தங்கள் தோள்களில் ஆடுகளை போட்டபடி மலைக்குச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும், மலை மீது வழிபாடு செய்வதற்கான அனுமதி மட்டும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தடையை மீறி கிடாவுடன் மலை மீது உள்ள தர்காவிற்கு செல்ல முயன்றுள்ளனர். இதனால், போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதைகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment