*மீன்களின் விலை 2 மடங்காக உயர்வு : வெறிச்சோடி கிடக்கும் மல்லிப்பட்டினம் ஏலக்கடைகள்*

சேதுபாவாசத்திரம்: மீன்பிடி தடைக்காலத்தால் சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்களின் விலை 2 இடங்காக உயர்ந்துள்ளது. மேலும் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மீன் பிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 54 படகுகளை பகுதி சேதமும், 188 படகுகள் முழு சேதமும் அடைந்தது. 5 மாதங்களுக்கு மேலாகியும் முழுமையாக சேதமடைந்த 54 விசைப்படகுகளுக்கும், பகுதி சேதமடைந்த 54 படகுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் முழு சேதமடைந்த 134 படகுகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. இதனால் குறைந்தளவு படகுகள் மட்டுமே கடந்த ஒரு மாதமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றது. உரிய நிவாரணம் கிடைக்காமல் படகு தயார் செய்ய முடியாமல் மீனவர்கள் தடுமாறி வருகின்றனர். தற்போது வரை 15 மீனவரகள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி கடந்த 15ம் தேதி முதல் ஜூன் 15 தேதி வரை 60 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இதனால் குறைந்தளவு மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் வியாபாரிகள் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பல்வேறு நகரங்களுக்கு மீன்களை வாங்கி சென்று விற்பனை செய்து வந்தனர். தற்போது விசைப்படகுகள் இல்லாமல் நாட்டு படகுகள் மட்டும் ஆழ்கடலை தவிர்த்து கரையோரங்களில் மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி போன்ற பகுதிகளில் உள்ள ஏலக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு குறைந்தளவு மீன்களே விற்பனைக்கு வருகிறது. இதனால் ஒரு கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட காளை மீன் 600 முதல் 750 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.600 வரை விற்கிறது. அதேபோல் ரூ.150க்கு விற்கப்பட்ட பொடி மீன் ரூ.450 வரையும், ரூ.300க்கு விற்கப்பட்ட இரால் ரூ.700 வரையும், ரூ.300க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.600க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கருவாடு விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட நெத்திலிகருவாடு ரூ.400 வரை விற்கிறது. ஒரு கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட காளை கருவாடு ரூ.500 வரையும், ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட பொடிதட்டைகாரல் கருவாடு ரூ.250 வரை விற்கிறது. மீன் விலை இருமடங்கு உயர்ந்தாலும் மார்க்கெட்டுகளுக்கு மீன் வருவாய் குறைவாக உள்ளதால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
...

Post a Comment

Previous Post Next Post