ரேஷன் கடைகளில் ஆதார் எண் கொடுக்க வேண்டாம்: அரசு விளக்கம்.!

 


திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக 2023-ஆம் ஆண்டு பொங்கல் பரிசில் இடம்பெற உள்ள பணமும், வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆதார் எண் அடிப்படையில், உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 2.23 கோடி ரேஷன் அட்டைத்தாரர்களில், 14.84 லட்சம் பேருக்கு வங்கி கணக்குகள் இல்லாதது தெரியவந்தது.

அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்காக வங்கி கணக்கு இல்லாதவர்களின் பட்டியல், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால் ரேஷன் ஊழியர்கள், பட்டியலில் இல்லாதவர்களையும் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்துவதோடு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றனர். இது மக்களிடையே, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ரேசன் அட்டைதாரர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் ஆதார் எண் கேட்கக் கூடாது என ரேசன் கடை ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கி கணக்கு இல்லாத நபர்கள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம். அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே கணக்கு உள்ளது என்றால் அந்த வங்கிக்கு சென்று, அவர்களின் ஆதாரை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.

இல்லையெனில் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய வங்கியிலோ புதிய கணக்கு துவக்க வேண்டும். அதை ஆதார் எண் உடன் இணைத்து, அந்த விபரத்தை அவர்களது ரேஷன் கடையில் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும் கார்டுதாரர்களின் ஆதார் எண் விபரங்களை, எக்காரணத்தை முன்னிட்டும் கேட்கவோ மற்றும் ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என சார்நிலை அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post