30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை ரயில்நிலையத்தில் சரக்கு முனையம் துவக்கம்.!

 



பட்டுக்கோட்டை, ரயில்நிலையத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு முனையம் திறக்கப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரவைக்காக, நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.  


திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில், அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டு துவங்கி 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரயில்நிலையத்தில்,  
சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்க, நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், 2019 இல் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சரக்கு முனைய அலுவலகம், லாரிகள் வந்து செல்ல அணுகு சாலைகள், சிமெண்ட் தளம், உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை, லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில், பூஜைகள் நடத்தப்பட்டு நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என். உமா மகேஸ்வரி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பி. பெத்துராஜ், பட்டுக்கோட்டை ரயில் நிலைய அதிகாரி மருத பாண்டியன், வட்டார லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் போஜராஜன், ரயில்வே சுமைதூக்கும் செயலாளர் சங்கத் தலைவர் எம். ஜான்கென்னடி, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம், துணை செயலாளர் மு. கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது; மீட்டர் கேஜ் காலத்தில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், நெல் மூட்டைகள் சரக்கு ரயில்களில் ஏற்றி அனுப்பப்பட்டது.  மேலும், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், விவசாயத்திற்கான உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
பின்னர், 1993 முதல் சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதால், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள நெல் மூட்டைகள் விரைவாக அரவைகளுக்கு கொண்டு செல்ல முடியும், 350 லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துவக்கமாக, 21 சரக்கு வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, ராஜபாளையத்திற்கு அரவைக்காக அனுப்பப்படுகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post