பேராவூரணியில் போதிய பேருந்து வசதி இன்றி பொதுமக்கள் அவதி.!



 பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும், பல பேருந்துகளை விழா காலங்களில் சிறப்பு பேருந்து என்ற பெயரில் வெளியூர்களுக்கு அனுப்பி விடுவதால் பேராவூரணி நகருக்கு வரும் கிராம பொதுமக்கள் மாலை நேரங்களில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமான பேராவூரணிக்கு தாலுகா அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, வங்கிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க என பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கிராமப் பகுதிக்கு செல்வதற்கு முக்கியமாக மக்கள் நம்பி இருப்பது நகரப் பேருந்துகளைத் தான். விசேஷ நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளை சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் வெளியூர்களுக்கு அனுப்பி விடுவதால் பேராவூரணி நகருக்கு வரும் பொது மக்களும் மாணவர்களும் குறிப்பாக மாலை 6 மணிக்கு பிறகு கிராமப் பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் இரவு நேரத்தில், ஏழை, எளிய மக்கள் நடந்தும், ஆட்டோவிற்கு அதிக வாடகையை கொடுத்து செல்லும் நிலைமை உள்ளது. அண்மையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பேராவூரணியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் நடைபயணமாக தங்கள் கிராமங்களுக்கு நடந்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post