பட்டுக்கோட்டை அருகே பெண் நில அளவையரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நில அளவையராக பணியாற்றி வருபவர் பவ்யா (24). இவர் கடந்த 2ஆம் தேதி சோழகன் குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தம் (54) என்பவரின் தங்கை பெரியகோட்டையை சேர்ந்த ஜோதியின் இடத்தை அப்பகுதி விஏஓ மாரியம்மாளுடன் சென்று அளந்தார்.
அப்போது அப்பணியை முருகானந்தம், இவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி அவரது கணவர் சுபாஷ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது இதுகுறித்து கேட்டநில அளவையர் பவ்யாவை முருகானந்தம் தாக்கினார். இதைத் தடுத்த விஏஓ மாரியம்மாளையும் அவர் தாக்கினார். இதில் பய்வாவின் மண்டை உடைந்தது.
இதுகுறித்து மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் கடந்த 2 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கல்லாக்கோட்டையில் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை மதுக்கூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Post a Comment