இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம்.!




இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம்!

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் புதிதாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.


ஐரோப்பிய ஒன்றியம் அதன் 'ஷெங்கன் விசா' விதிகளைச் சமீபத்தில் மாற்றியுள்ளது. இது இந்திய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

விதிகளில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தப் புதிய மாற்றத்தால் வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி ஐரோப்பாவுக்கு செல்பவர்களுக்குச் செயல்முறைகள் எளிதாக இருக்கும்.


ஷெங்கன் விசா என்றால் என்ன?


ஷெங்கன் விசா என்பது ஐரோப்பியர் அல்லாதவர்கள் 29 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு வகை விசா.

இருப்பினும், இந்த விசா மூலம் வெளிநாட்டில் வேலை செய்ய அனுமதி கிடைக்காது. இந்த விசா அதிகபட்சம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்

விதிகளில் புதிய மாற்றங்கள் என்ன?

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று, இந்திய குடிமக்களுக்குப் பலமுனை நுழைவு விசாக்களை (multiple entry Schengen visa) வழங்குவதற்கான புதிய விதிகளை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டது.


செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் கடந்த காலத்தில் ஐரோப்பாவுக்கு குறிப்பிட்ட முறைகள் பயணம் செய்த விவரங்கள் சரியாக இருந்தால், அதாவது நல்ல பயண வரலாறு இருந்தால், இந்தப் பலமுனை நுழைவு ஷெங்க்கன் விசாவை எளிதாகப் பெறலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஷெங்கன் விசா சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்திய குடிமக்கள் இரண்டு வருட காலத்திற்குப் பலமுனை நுழைவு ஷெங்கன் விசாவை பெறலாம்.


ஒருவரது பாஸ்போர்ட் அங்கீகரிக்கப்பட்டால், இரண்டு வருட விசாவிற்குப் பிறகு 5 வருட விசாவும் பெற முடியும். இந்த விசா அங்கீகாரம் இருக்கும் வரை, இதை வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களுக்கு இருக்கும் அதே பயண உரிமைகள் இருக்கும்.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொதுக் குறிக்கோள்களின்' கீழ் குடிபெயர்வு தொடர்பான உறவை வலுப்படுத்த இந்தப் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விசா இருந்தால் எந்தெந்த நாடுகளுக்குச் செல்லலாம்?


இந்த விசா வைத்திருப்பவர், ஒவ்வொரு 180 நாட்களிலும், அதிகபட்சமாக 90 நாட்களுக்கு ஷெங்கன் நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். ஷெங்கன் பகுதி என்பது 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.


பெல்ஜியம்

பல்கேரியா

க்ரோஷியா

செக் குடியரசு

டென்மார்க்

ஜெர்மனி

எஸ்தோனியா

கிரேக்கம்

ஸ்பெயின்

பிரான்ஸ்

இத்தாலி

லாட்வியா

லிதுவேனியா

லக்சம்பர்க்

ஹங்கேரி

மால்டா

நெதர்லாந்து

ஆஸ்திரியா

போலந்து

போர்ச்சுகல்

ருமேனியா

ஸ்லோவேனியா

ஸ்லோவாகியா

பின்லாந்து

ஸ்வீடன்

ஐஸ்லாந்து

லிச்சென்ஸ்டீன்

நார்வே

சுவிட்சர்லாந்து


நன்றி : பிபிசி தமிழ்


Post a Comment

Previous Post Next Post