தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் சுமார் 500 மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூபாய் 8, 000 வழங்கப்படவில்லை. இதையடுத்து, விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமை காலை பேராவூரணி அருகே உள்ள செந்தலைவயலில்
கிழக்கு கடற்கரைச் சாலையில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மீனவர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அ. தெய்வானை தலைமையில் ஜூன் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளர், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர்கள், பட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர், பெருமகளூர் கிராம நிர்வாக அலுவலர் அரசுத்தரப்பிலும்,
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர். எஸ். வேலுச்சாமி, வழக்குரைஞர் கருப்பையன், பி. பெரியண்ணன், ஏ. சகாப்தீன், வி. ஆர். கே. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுபட்ட 365 மீனவர்களின் விவரங்களை ஆய்வு செய்து 15 தினங்களுக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்
இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Post a Comment