போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்.!

 



தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இறால் மட்டும் அதிக அளவில் கிடைத்த நிலையில் அவற்றுக்கும் போதிய விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித்தடைக் காலம் அமலில் இருந்தது. தடைகாலம் முடிந்து தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் உள்ள 148 விசைப் படகுகளில் 135க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை கடலுக்குச் சென்றனர். தடைகால முடிந்த பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என நம்பி சென்றனர். ஆனால் மீனவர்களுக்கு குறைந்த அளவு கூட மீன், நண்டு, கணவாய் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இறால் கிடைத்தது. ஆனாலும் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், வழக்கமாக ஏற்றுமதி தரம் வாய்ந்த இந்த வகையான இறால்கள் கிலோ 450 க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். தற்போது அதிக அளவில் இறால் கிடைத்ததால் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து கிலோ ரூ250க்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே அரசு குளிர்பதன கிடங்கு அமைத்துக் கொடுத்தால் மீனவர்கள் தங்கள் பொருட்களை பாதுகாத்து வைத்திருந்து அதிக விலைக்கு விற்க முடியும் என்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post