விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க 65 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை ஜீன் 1ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. ஆனால், மீன்களை வாங்க ஏற்றுமதியாளர்கள் வராத காரணத்தால் மீன்பிடிக்க செல்லமுடியாமல் மீண்டும் முடங்கியுள்ளனர் மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதைவிடவும், அதிகளவில் ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது கோரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன் ஏற்றுமதி தொழில் கடுமையாக முடங்கியுள்ளது. எனவே, இறால் மற்றும் மீன்களை வாங்குவதற்கு ஏற்றுமதியாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் மீனவர்களின் துயரம் இன்னும் தொடர்கிறது.
“ஏற்றுமதியாளர்கள் யாரும் வராத காரணத்தால் நாங்கள் அரசிடம் முறையிட்டோம், அதற்கு பதிலளித்த அரசு இப்போது பிராசசிங் செய்ய ஆட்கள் இல்லை; எனவே, இன்னும் ஓரிரு வாரம் கழித்து தொழிலுக்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள், இதனால் 10 இலட்சம் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அரசிடம் பல சலுகைகள், மானியங்கள், உதவிகளை பெறும் ஏற்றுமதியாளர்கள் இந்த கொரோனோ பேரழிவில் மீனவர்களுக்கு சிறு உதவிகூட செய்யவில்லை.
மஞ்சள் போன்ற விவசாயப் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் போல பதப்படுத்தும் கூடங்களை அரசு அமைத்துதர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம், ஆனால், அரசு அதற்கு செவிமடுக்காத காரணத்தால் நாங்கள் இப்போது கடுமையாக பாதித்துள்ளோம். எனவே, அரசு உடனடியாக மீன்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்துத் தரவேண்டும், எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகள் செய்ய வேண்டும்” என்கிறார் மீனவர் சங்க பிரதிநிதி தாவூது

Post a Comment