டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதனால் இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 7ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய தில்பிரீத் சிங் ஒரு ஃபில்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் கால்பாதியின் முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணியின் வீரர் குர்ஜாந்த் சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.இதனைத் தொடர்ந்து மூன்றாவது கால்பாதியின் இறுதியில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து 1-2 என்ற கணக்கில் முன்னிலையை குறைத்தது.
இதனால் கடைசி கால்பாதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பிரிட்டன் அணியின் வீரர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். கடைசி கால்பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹர்திக் சிங் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது.அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
Post a Comment