ஓய்வூதியம் உயர்த்தி வழங்கல்: நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு



 தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூபாய் 1000 த்திலிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. இதற்காக தமிழக அரசு கூடுதலாக 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்படும் வரும் ஓய்வூதியத் திட்டங்களின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூபாய் 500-ல் இருந்த ரூ 1000 ஆக உயர்த்தி கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, தற்போது அவர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் ரூ 1000த்திலிருந்து 1500 ஆக வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.

மேலும் தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை, ரூ. 1000 த்தில் இருந்து ரூ1, 500 ஆக உயர்த்தி வழங்கவும், இது 2022 டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 2023 பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முடிவு செய்து ரூபாய் 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500க் கான நிதி ஒதுக்கீடு செய்த அரசு ஆணையிட்டுள்ளது.

இதற்கு தஞ்சை மாவட்ட நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் பகாத் அகமது கூறுகையில், மாற்றுத்திறன்
உடையோர் ஓய்வூதியம் மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அரசு ரூ. 1, 500 ரூபாய் வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். தற்போது உள்ள விலைவாசி சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post