தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment