மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலையம் மற்றும் தமிழ்நாடு கடலோரக் காவல் குழுமம் இணைந்து, சமூக தொடர்பு திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள காரங்குடா, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.
இதில், இந்திய கடலோர காவல் படை நிலைய அலுவலர்கள் பி. வி. வினோ, எஸ். கே. ரமேஷ் ராஜா, ஆறுமுகம், மோகன்ராஜ், தமிழ்நாடு கடலோர காவல் குழும, பட்டுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதநிதிகள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் அதிகாரிகள் பேசுகையில், "கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது மீனவர்கள் தங்கள் அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் எச்சரிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். எல்லை தாண்டி சென்று கடலுக்குள் மீன் பிடிக்க கூடாது. கடலுக்குள் சட்டவிரோத செயல்கள், கடத்தல், தீவிரவாதிகள் நடமாட்டம், அந்நிய நபர்கள் ஊடுருவல் இருந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment