ஆளுநராக இருந்தபோது மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிக்கு வருகை தந்திருந்த பாத்திமா பீவி.!

 


தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (வயது 96) முதுமை காரணமாக கேரளாவில் இன்று காலமானார். 

நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பாத்திமா பீவி.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927-ம் ஆண்டு அன்னவீட்டில் மீரா சாகிப்- கதீஜா பீவி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவி. சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். நாட்டின் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமைக்குரியவர்.

1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றினார்.அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 96 வயதில் காலமானார் பாத்திமா பீவி.

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிக்கு அவர் தமிழக ஆளுநராக இருந்த போது 2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மல்லிப்பட்டினம் எஜூகேசனல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணமாக பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அந்த அடிக்கல்  இன்னும் முகைதீன் ஜூம்ஆ பள்ளியிலே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அவர் வருகையின் போது மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




Post a Comment

Previous Post Next Post