மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் டீசல் அளவை உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக மீனவர்கள் படகுகளுக்குத் தேவைப்படும் டீசலை வரிவிலக்கு அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மீன்பிடித் தொழில் லாபகரமாக இல்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டுமன மீனவ சங்கங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தன. இதனிடையே, ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் மீனவர்களுக்கு அளிக்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார்.
அதாவது, ஒரு விசைப் படகுக்கு ஆண்டுக்கு அளிக்கப்படும் 18, 000 லிட்டர் டீசல் அளவை 19, 000 லிட்டராகவும் ஒரு நாட்டுப் படகுக்கான அளவை ஆண்டுக்கு 4, 000 லிட்டரில் இருந்து 4, 400 லிட்டராகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகழ் நிதியாண்டிலேயே மீனவர்களுக்கான டீசல் அளவு உயர்த்தி அளிக்கப்படும். இதனால், 4, 400 விசைப் படகு மீனவர்களும், 13, 200 நாட்டுப் படகு மீனவர்களும் பயன்பெறுவர். அரசின் அறிவிப்பை தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணை தலைவர் தாஜுதீன் வரவேற்றுள்ளார்.

Post a Comment