பொதுக்குழு வரை வந்த குடும்ப சண்டை அன்புமணி-ராமதாஸ் இடையே மோதல்.!

 



பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் மணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது புதுச்சேரி இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிப்பதாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள்கூட ஆகாத ஒருவர் எப்படி இளைஞரணி தலைவராக முடியும்? கட்சியில் உழைக்கக்கூடியவர்கள் பலரும் உள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ராமதாஸ் கட்சியை உருவாக்கியது நான் தான். கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நான் தான் நியமிப்பேன். இதில் உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி ஒரு கட்டத்தில், எனக்கு சென்னை பனையூரில் அலுவலகம் உள்ளது. என்னை சந்திக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் அறிவித்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது ராமதாஸ் அதிமுக.வுடன் கூட்டணி செல்ல விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே பாஜக.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்ததால் இருவரிடையே கடுமையான பனிப்போர் இருந்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த மோதல் மேடையிலேயே வெடித்துள்ளது

Post a Comment

Previous Post Next Post