தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்தித்து வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக அரசின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தும்,இட ஒதுக்கீடை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தனர்.
கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிறுபான்மை முஸ்லிம்களின் நலனுக்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டுஒன்றிய பாஜக அரசு மிகப்பெரும் சதித்திட்டத்தை இந்தியாவில் அரங்கேற்றி உள்ளது. இதனால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ள மாபாதகங்களை அறிந்த தங்கள் தலைமையிலான மாநில அரசு சார்பாக தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினீர்கள். தி.மு.க வை சார்ந்த மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், கடுமையான எதிர்ப்புகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தனர்.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், இதற்கான எதிர்ப்பை தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதற்காகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாட்டின் முன்னால் முதல்வரும் தங்கள் தந்தையுமான திரு.மு.கருணாநிதி அவர்கள் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்கினார்கள்.
இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவாக உள்ளது. எனவே 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இஸ்லாமிய சமுதாயம் கோரிக்கை வைத்து வருகிறது. சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே நிறைவேற்ற படாமல் இருந்து வருகிறது.
தங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமியர்களின் சதவீதத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Post a Comment