மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாரிகள் ஆய்வு.!

 


தஞ்சாவூா் மாவட்டம்,  சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கள்ளிவயல்தோட்டம்  மீன்பிடி துறைமுக பகுதிகளில் விசைப்படகுகளை மீனவா் நலம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். 

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ்,தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் ,மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மொத்தம் 61 நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.

இந்நிலையில்,  மல்லிப்பட்டினத்தில் உள்ள 37, கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 50  விசைப்படகுகளையும் மீன்வளத்துறையினா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர்.

மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகன்டன்  தலைமையில் மல்லிப்பட்டினம்,கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதி விசைபடகுகளை ஆய்வு செய்தனர்.

இதில் ஆய்வாளர்கள் துரைராஜ்,குமார்,சார் ஆய்வாளர் சங்கர் ஆகியோர் ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

படகுகள் நிர்ணயிக்கப்பட்ட நீளம் மற்றும் அகலம் உள்ளதா என்றும், என்ஜின்களின் குதிரை திறன் குறிப்பிட்ட அளவிற்குள் உள்ளதா என்றும், ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் உபகரணங்கள் வைத்திருக்கின்றனரா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் படகுகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் பட்சத்தில், அவைகளுக்கு மீன்பிடி அனுமதி வழங்கப்படாது என்றும், அதனை நிவர்த்தி செய்த பின்பு தான் அனுமதி வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பைபர் மற்றும் நாட்டுமர படகுகள் மட்டும் மீன்பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மேற்பார்வையாளர்கள் லெட்சுமி தாஸ்,விஜயபாலன்,லோகேஷ் சாகர் மித்ரா பணியாளர் அப்துல் நிவாஸ்,சுந்தர்,ஜோதி,சியாமளா தேவி,சத்யாணந்தம் மற்றும் நீலகண்டன ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post