தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அண்ணாமலைக்கு ஏலக்காய் மாலை மற்றும் சால்வை அணிவித்து சிரித்தபடியே வரவேற்றார் கிருஷ்ணசாமி வாண்டையார். இருவரும் தனியாக பேசியதாகவும், இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கிருஷ்ண்சாமி வாண்டையார் விரும்பினாலும் கடந்த காலங்களில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இம்முறை தஞ்சை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை தொகுதியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அண்ணாமலையுடனான இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு யூகங்கள் கிளம்பின. எனினும், இது தொடர்பாக விளக்கம் அளித்த கிருஷ்ணசாமி வாண்டையார், இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் இதுகுறித்து விளக்கம் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக அங்கம் வகிக்கிறது. தினகரனின் மகளைத்தான் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpeg)
Post a Comment