மதுரை திருப்பரங்குன்றத்தில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை சிக்கந்தா மலையில், சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் தர்ஹா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்ஹாவுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து, தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு தங்கி, வெள்ளிக்கிழமை மாலை செல்பவர்களும் உண்டு. இந்த தர்ஹாவிற்கு மதங்களை கடந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், வரலாற்று ஆர்வலர்களும் வந்து செல்லும் இடமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பம் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தர்காவிற்கு சென்றபோது காவல்துறை அத்துமீறி அவர்களை தடுத்து நேர்த்திக்கடன் செய்யக்கூடாது எனவும், தர்காவிற்கு செல்லக்கூடாது எனவும் தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்குள்ள மக்கள் கூடி போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த தர்காவிற்கு செல்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி அடாவடியில் ஈடுபட்டு வருகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் உட்பட பலரும் கண்டித்து வருகின்றனர். அங்குள்ள ஜமாஅத் நிர்வாகமும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றது.
காவல்துறையினர் தரப்பில் தடைக்கான காரணத்தை ஆவணத்தை காட்டாமல், மேலிட உத்தரவு எனக்கூறி வாய்மொழி உத்தரவாக அடாவடிகளை கையாண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மற்ற தர்ஹாக்களைப் போன்று, சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவிலும் காலங்காலமாக ஆடு, கோழிகளை அறுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் போது, அதற்கு அனுமதி மறுப்பது சிறுபான்மை சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
Post a Comment